

பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் கால்வாய் பாசனத்துக்கு நேற்று நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 15 ஆயிரத்து 743 ஏக்கர் நிலம் பாசனம் பெறவுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் மூலம் தடப்பள்ளி - அரக்கன்கோட்டை, காலிங்கராயன் மற்றும் கீழ்பவானி பாசனத்துக்குட்பட்ட இரண்டரை லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. தற்போது தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்துக்கு அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று முதல் காலிங்கராயன் கால்வாய் பாசனத்துக்கு நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்பட்டு, கலிங்கராயன்பாளையம் அணைக்கு வந்த நீரை, வாய்க்கால் பாசனத்துக்காக மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி நேற்று திறந்து வைத்தார். பவானிசாகர் அணையில் உள்ள நீர் இருப்பு, பருவமழை மூலம் எதிர்பார்க்கப்படும் நீர்வரத்து மற்றும் குடிநீர் தேவை ஆகியவற்றை கணக்கில் கொண்டு பாசனத்துக்கு நேற்று (21-ம் தேதி) முதல் நவம்பர் 17-ம் தேதி வரை 120 நாட்களுக்கு, விநாடிக்கு 400 கனஅடி வீதம் நீர் திறக்கப்படுகிறது. இதன்மூலம் 15 ஆயிரத்து 743 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் இந்நிகழ்ச்சியில் நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் அ.அருள், உதவி செயற்பொறியாளர்கள் ஜெயபிரகாஷ், தினகரன் மற்றும் காலிங்கராயன் பாசன விவசாயிகள் கலந்து கொண்டனர்.