

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 3,437 பேருக்கு வரும் 26-ம் தேதி முதல் திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் உடற்கூறு அளத்தல் மற்றும் உடற்தகுதி தேர்வு நடைபெறவுள்ளது.
தமிழக அரசு அறிவித்துள்ள கரோனா விதிமுறைகளை பின்பற்றி ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 500 பேருக்கு மட்டுமே இத்தேர்வு நடத்தப்படும். இதற்கான அழைப்பு கடிதம் ஏற்கெனவே தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
இத் தேர்வில் பங்கேற்க வருவோர் கட்டாயம் அழைப்பு கடிதம், அடையாள அட்டை, அனைத்து கல்வி அசல் சான்றிதழ்கள் மற்றும் நகல்கள் கொண்டுவர வேண்டும். மேலும் அனைவரும் கண்டிப்பாக கரோனா பரிசோதனை செய்த சான்றிதழை கொண்டுவர வேண்டும். பரிசோதனை 4 நாட்களுக்குள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். முகக்கவசம் அணிந்து வருவதுடன், கூடுதலாக ஒரு முகக்கவசத்தையும் கொண்டுவர வேண்டும்.
மைதானத்துக்குள் செல்போன், எலக்ட்ரானிக் வாட்ச் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் கொண்டு வர அனுமதியில்லை. மேலும் ஒரே மாதிரியான வண்ணம் மற்றும் லோகோ உடைய டி சர்ட்களை அணிந்து வரவும் அனுமதியில்லை. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.