

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையை அடுத்த மேலந்தல் கிராமத்தில் கடந்த 16-ம் தேதி தண்டபாணி என்பவரின் வீட்டில் நகை திருடு போனதாகக் கிடைத்த புகாரின் அடிப்படையில், திருக்கோவிலூர் காவல் ஆய்வா ளர் பாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில் நேற்று மாடம் பூண்டி நான்குமுனை சந்திப்பில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த வடகரைதாழனூர் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் (45) என்பவரை பிடித்து விசாரித்த போது, மேலந்தல் கிராமத்தில் தண்டபாணி என்பவரின் வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டார்.
கிராமப்புறங்களில் ஊரில் எவரும் இருக்க வாய்ப்பில்லாத நேரத்தை பயன்படுத்தி அவர்கள் வீட்டினுள் நுழைந்து நகை மற்றும் பணம் கொள்ளையடித்து வந்ததை ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து அவரிடமிருந்து 75 பவுன் நகை, ரூ. 25 ஆயிரம் ரொக்கம், 25 கிராம் வெள்ளி, இரு கார்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீஸார், காமராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.