

கரோனா தொற்று பரவல் காரணமாக பவானி கூடுதுறையில் புனித நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடம் என்பதால் 'திரிவேணி சங்கமம்' என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கோயிலுக்கு பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் கரோனா தொற்று பரவலை தடுக்க தற்போது தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கோயில்களில் மக்கள் கூட்டம் அதிகமானால் கரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் என்பதால் கோயில் விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஆடி 1-ம் தேதியான நேற்று பவானி கூடுதுறையில் புனித நீராடுதல் போன்ற நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதேவேளை யில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.