

நாமக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6, 7, 8-ம் வகுப்பு வரையிலான, மாணவர் சேர்க்கையின் போது மாணவர்களுக்கு 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை ஆசிரியர்கள் தொடங்கியுள்ளனர்.
நாமக்கல் மோகனூர் சாலையில் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இப்பள்ளியில் தற்போது மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.
மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையிலும், அரசுப் பள்ளிகள் மீது பெற்றோருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளனர். இதன்படி, 6, 7, 8-ம் வகுப்பில் தலா 100 மாணவர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ.1000 வீதம் ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கென ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து சொந்த பணத்தில் நிதியம் உருவாக்கியுள்ளனர். 300 மாணவர்களுக்கும் தலா ரூ.1000 வீதம் ரூ.3 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்க ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ஜெகதீசன், ஆசிரியை ராஜலட்சுமி ஆகியோர் கூறியதாவது:
கரோனா பாதிப்பால் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இடைநிற்றலைத் தவிர்க்கவும், அரசுப் பள்ளியில் சேர்வதை ஊக்கப்படுத்தவும், அனைத்து ஆசிரியர்களும் ஒன்றிணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகிறோம். மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் இதற்கு வரவேற்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.