

அனைத்து கிராமங்களிலும் இ-சேவை மையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும், என தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி என்.சிவகுமார் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவன தலைவராக பொறுப்பேற்ற குறிஞ்சி என்.சிவகுமார், ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் 32 லட்சம் அரசு கேபிள் டி.வி. இணைப்புகள் இருந்தன. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் அவை முறையாகப் பராமரிக்கப்படாததால், தற்போது 26 லட்சமாக குறைந்துள்ளது. தமிழகத்தில் முதலிடத்தில் இருந்த அரசு கேபிள் டி.வி. இணைப்பு தற்போது 2-ம் இடத்துக்கு வந்து விட்டது.
கடந்த ஆட்சியின்போது தவறான கொள்கை முடிவினால் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு ரூ.400 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
அரசு கேபிள் டி.வி. இணைப்பை செட்டாப் பாக்சில் வழங்க 36 லட்சம் செட்டாப் பாக்ஸ் வாங்கி, அதில் 26 லட்சம் செட்டாப் பாக்ஸ்க்கு மட்டுமே இணைப்பு கொடுத்துள்ளனர். மீதமுள்ள, 10 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் எங்குள்ளது என தெரியவில்லை. அவற்றை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகையைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த இரு நாட்களுக்கு முன்பு பல புதிய சேனல்களை அரசு செட்டாப் பாக்ஸில் இணைக்கப்பட்டுள்ளது. அரசு கேபிள் டி.வி. கட்டணம் குறைப்பது குறித்து தமிழக முதல்வர் முடிவெடுப்பார். அரசு செட்டாப் பாக்ஸ் பெற மக்கள் விண்ணப்பிக்கும்போது, தனியார் செட்டாப் பாக்ஸ் வாங்க கட்டாயப்படுத்தினால் சம்பந்தப்பட்ட ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் தற்போது அனைத்து வகையான சேவையும், இ–சேவை மையம் மூலம், ஆன்லைனில் விண்ணப்பித்து பெற வேண்டி உள்ளது. அதனால் தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் இ-சேவை மையங்களை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.