

திருநெல்வேலி அருகே தாழையூத்தை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரரான கண்ணன் (35), கடந்த 12-ம் தேதி பண்டாரகுளம் அருகே 6 பேர் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். போலீஸார் நடத்திய விசாரணையில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதி முத்துமனோ கொலை செய்யப்பட்ட விவகாரத்தின் எதிரொலியாக இச்சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது. கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது.
கண்ணன் கொலை வழக்கில் தொடர்புடையதாக வாகைகுளத்தை சேர்ந்த நல்லதுரை (22), சங்கிலி பூதத்தான் (20), குரு சச்சின் (22), அம்மு வெங்கடேஷ் (22) ஆகியோரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஜேக்கப் மற்றும் அவரது கூட்டாளிகளால் கைதி முத்து மனோ கொலை செய்யப்பட்டதாகவும், இதற்கு பழி வாங்க ஜேக்கப்பின் நெருங்கிய உறவினரான கண்ணனை கொலை செய்ததாகவும் கைதானவர்கள் அளித்த வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளனர்.
கண்ணனின் மனைவி மைதிலி புனிதாவுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அவரது குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் 4-வது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணனின் உறவினர்களுடன் மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு, திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன்குமார், மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன், மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து கண்ணனின் உடலை பெற்றுக் கொண்டனர்.