

சேலம் மாவட்டத்தில் 665 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என சேலம் எஸ்பி அபிநவ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் போதைப் பொருள் விற்பனை தடுப்பு நடவடிக்கை, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தொடர் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட ரவுடிகள் உருட்டு குமார், இளங்கோ, மகேந்திரன், ரஞ்சித்குமார், பெரியசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 33 ரவுடிகள் மீது வழக்குப் பதிவு செய்து கோட்டாட்சியர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று காலத்தில் கள்ளச்சாரய விற்பனையை தடுக்க சோதனைச் சாவடிகள் அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. மொத்தம் 1,193 வழக்குகள் பதிவு செய்து, 1,229 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 6,665 லிட்டர் கள்ளச்சாரயம், 19,190 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
மது பதுக்கி விற்பனை செய்த வழக்கில் 5,470 லிட்டர் மதுபானங்கள், 217 லிட்டர் கர்நாடக மாநில மதுபானங்கள், மது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 15 நான்கு சக்கர வாகனம், இரண்டு மூன்று சக்கர வாகனம், 102 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் 58 மனுக்கள் பெறப்பட்டு, சிறப்பு கவனம் செலுத்தி மனு மீது விசாரணை செய்து பதில் அளிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உரிமம் இன்றி வைத்துள்ள துப்பாக்கியை ஒரு வாரத்துக்குள் அவர்களாகவே முன்வந்து காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். ஒப்படைத்தால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யமாட்டோம். மீறி வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பெண்கள் உதவி மையம் தொடங்கப்பட்டு அங்கு 21 மனுக்கள் பெறப்பட்டு, 15 மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இளைஞர்கள் சிறு வயதில் காதலிப்பது தவறு என்பதை அறியாமல் காதலிக்கின்றனர். இதுதொடர்பாக சேலம் மாவட்டத்தில் 250 இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம். சிறுவயது காதல் பெரும் குற்றம். இது போக்சோ வழக்கு வரை செல்லும். போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் மாவட்டத்தில் 665 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, ஏடிஎஸ்பிக்கள் முருகன், சக்திவேல், பாஸ்கரன், செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.