

திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இரா.கஜேந்திரபாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது கார் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சாகுபடிக்கு தேவையான உரங்கள், தனியார் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் போதிய அளவு இருப்பில் உள்ளது. தற்போது திருநெல்வேலிக்கு சரக்கு ரயில் மூலம் 1,517.4 மெ.டன் யூரியா வரப்பெற்றுள்ளது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்துக்கு ஒதுக்கீடு பெறப்பட்ட 800 மெ.டன் யூரியா மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலுள்ள தனியார் உரக்கடைகளுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்பிக் நிறுவனத்திலிருந்து 226.8 மெ.டன் யூரியா மாவட்டம் முழுவதும் வழங்கப்பட்டுள்ளது. தேவைப்படும் விவசாயிகள் தங்கள் வட்டாரத்தில் உள்ள தனியார் உரக்கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். ஒரு மூடை யூரியாவுக்கு அரசு நிர்ணயித்த விலை ரூ.266.50 ஆகும். மூடையில் குறிப்பிட்டுள்ள விலையை மட்டும் செலுத்தி கண்டிப்பாக விவசாயிகள் ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.
யூரியா, டிஏபி மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க இப்கோ நிறுவனம் மூலமும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றை மாவட்ட தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம்.