

புன்செய் புளியம்பட்டியில் சீரான குடிநீர் விநியோகம் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட நொச்சிக்குட்டை பொன்மேடு பகுதியில் கடந்த 5 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் ஒன்று திரண்டு, புன்செய்புளியம்பட்டி - திருப்பூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கடந்த ஆறு மாத காலமாகவே இப்பகுதியில் தண்ணீர் பிரச்சினை உள்ளது. நாங்கள் அனைவரும் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி உபயோகித்து வருகிறோம். இது குறித்து அதிகாரிகளிடம், பலமுறை முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, வேறுவழியின்றி சாலை மறியலில் ஈடுபடுகிறோம், என்றனர்.
அங்கு வந்த பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர் மைதிலி, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பகுதியில் விரைவில் மூன்று ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்படும் என்றும், கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டம் இரண்டில் இப்பகுதியை இணைத்து செயல்படுத்த வலியுறுத்துவதாகவும் அவர் உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியலால் புளியம்பட்டி திருப்பூர் சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.