

தூத்துக்குடி மாவட்டம் சிவகளை பகுதியில் நடைபெறும் அகழாய்வு பணிகளை கனிமொழி எம்.பி, தமிழக தொழில் துறை மற்றும் தமிழ் வளர்ச்சி, பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.
அமைச்சர் தங்கம் தென்னரசு கூறும்போது, “ பொருநை நதிக்கரை நாகரிகத்தை வெளிக்கொண்டு வரும் வகையில் சிவகளை அகழாய்வு அமைந்துள்ளது. ஆதிச்சநல்லூர் அகழாய்வு குறித்து மத்திய தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அளவீட்டின்படி கி.மு.650-க்கும் கி.மு.850-க்கும் இடைப்பட்ட காலமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்கள். சிவகளை அதற்கும் முன்னதாக இருக்கக்கூடும். பராக்கிரமபாண்டி திரடு, வெள்ளை திரடு, செக்கடி, ஆவாரங்காடு போன்ற மனிதர்கள் வாழ்ந்த குடியிருப்பு பகுதி வாழ்விடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. சிவகளை பகுதியில் ஒரே குழியில் அதிகமான தாழிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. தாழிகளின் உள்ளே இருக்கக்கூடிய பொருட்கள், எலும்புகள், மண் மாதிரிகளை எடுத்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆய்வு கூடத்துக்கு அனுப்பி ஆய்வு நடைபெறுகிறது.
சிவகளை மிக முக்கிய வரலாற்று அடையாளமாக திகழ்கிறது. அகழாய்வு முடிந்து அறிக்கைகள் வரும்போது தமிழகத்தின் பழங்கால வாழ்க்கையில் சிவகளை ஒரு முக்கிய அத்தியாயத்தை எழுதும் என்பது உறுதி. பொருநை நாகரிகத்தை காட்சிப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்படும்” என்றார் அவர்.
ஆட்சியர் கி.செந்தில் ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.