பழைய கல்வெட்டை அகற்றியதால் - வைகுண்டத்தில் அதிமுகவினர் சாலை மறியல் :

வைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் முன்பு எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்.
வைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் முன்பு எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்.
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலக பராமரிப்பு பணியின் போது 2001-ம் ஆண்டு வைக்கப்பட்ட கல்வெட்டை அகற்றியதை கண்டித்து, அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், ஶ்ரீவைகுண்டம் முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் அக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் கடந்த 2001-ம் ஆண்டு கட்டப்பட்டு, அப்போதைய கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சரும், வைகுண்டம் எம்எல்ஏவுமான எஸ்.பி. சண்முகநாதனால் திறந்து வைக்கப்பட்டது.

தற்போது நடைபெற்ற தேர்தலில் வைகுண்டம் சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணியின் போது 2001-ம் ஆண்டில் இந்த அலுவலகம் திறக்கப்பட்டபோது வைக்கப்பட்ட பழைய கல்வெட்டு அகற்றப்பட்டது. இதையறிந்த அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் அதிமுகவினர் வைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் முன்பு திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், டிஎஸ்பி வெங்கடேசன் ஆகியோர் அங்கு வந்து அதிமுகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசு அலுவலக கட்டிடமான சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் இருந்த பழைய கல்வெட்டை அகற்றியவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி அதிமுகவினர் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்த போராட்டத்தால் வைகுண்டத்தில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அகற்றப்பட்ட பழைய கல்வெட்டு மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டது. அதிமுகவினர் கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in