

கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து குழந்தைகளின் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு வைப்பு நிதியாக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு தகுதியுடையோர் உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி ஈரோடு மாவட்டத்தில் நிவாரண உதவித்தொகை கேட்டு இதுவரை 98 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இதில் 3 குழந்தைகளுக்கு தாய், தந்தையர் அரசுப் பணியில் இருந்ததால் அந்த மனுக்கள் மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டது. 6 குழந்தைகள் கரோனாவால் தாய், தந்தை இருவரையும் இழந்தவர்கள். 89 குழந்தைகள் தாய் அல்லது தந்தை இருவரில் ஒருவரை இழந்தவர்கள். இவர்களில் தாய், தந்தை இருவரையும் இழந்த 2 குழந்தைகளுக்கு முதல்கட்டமாக வைப்புத் தொகையாக ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மேலும் விவரம் அறிய மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை அணுகலாம், என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.