

சேலத்தில் ரோபோடிக்ஸ் இயந்திரம் மூலம் பாதாள சாக்கடை கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. இப்பணியை மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.
சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ், “குப்பைகள் இல்லாத அளவுக்கு பணியை மேற்கொள்ள வேண்டும்.
மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படாத வகையில் பணிபுரிய வேண்டும்” என ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து 13-வது வார்டுக்கு உட்பட்ட மாணிக்கம் தெருவில் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை, தூய்மைப் பணியாளர்கள் முறையாக சேகரித்து மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து பெறுகிறார்களா என்பதையும் அவர் ஆய்வு செய்தார்.
காக்காயன்காடு பகுதியில் உள்ள நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் மையத்தை ஆய்வு செய்த ஆணையர்,“தினமும் எத்தனை டன் குப்பை கழிவுகள் மையத்துக்கு வருகிறது. எந்தெந்த வார்டுகளில் இருந்து பெறப்படுகிறது.
குப்பை கழிவுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட உரம் எத்தனை டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட விவரங்களை அனைவரின் பார்வைக்கும் எழுதி வைக்க ஊழியர்களுக்கு அவர் உத்தரவிட்டார். பின்னர் அங்குள்ள, ’நகருக்குள் வனம்’ பகுதியை பார்வையிட்டார். மேலும், அம்மாப்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட 40-வது வார்டுக்கு உட்பட்ட மாணிக்கவாசகம் தெருவில் ஆய்வு செய்த ஆணையர் அங்கு ரோபோடிக்ஸ் இயந்திரம் மூலம் பாதாள சாக்கடை திட்ட கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை அகற்றும் பணிக்கான செயல் விளக்கத்தை பார்வையிட்டார்.
ரோபோடிக்ஸ் இயந்திரம் மூலம் சாக்கடை கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்றலாம். பணியாளர்கள் இல்லாமல் ரோபோ மூலமாக எங்கெங்கு அடைப்பு உள்ளது என்பதை தெளிவாக தெரிந்து கொண்டு அக்கருவி மூலம் சாக்கடை அடைப்புகளை சரி செய்ய முடியும்.
ஆய்வின்போது, மாநகர பொறியாளர் அசோகன், மாநகர நல அலுவலர் பார்த்திபன், உதவி ஆணையர் சரவணன் உட்பட பலர் உடனிருந்தனர்.