

மோகனூரில் முன்னாள் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி உட்பட 8 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் – வளையப்பட்டி சாலை, பனங்காடு அருகில் சாலையோரம் முன்னாள் ராணுவ வீரர் சிவகுமார் (40) கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இது தொடர்பாக மோகனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கொலைச் சம்பவத்தில் சிவகுமாரின் மனைவி பார்கவிக்கு (26) தொடர்புள்ளது கண்டறியப்பட்டது.
அவரிடம் நடத்திய விசாரணையில், சிவகுமார் தனது மனைவி பார்கவியை சந்தேகப்பட்டு அடிக்கடி திட்டி வந்ததால், அவரது வீட்டின் அருகில் வசிக்கும் செல்வராசு (39), பார்கவியின் தாய் அம்சவள்ளி ஆகிய மூவரும் சிவகுமாரைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சேலம் மாவட்டம் மல்லூரைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவரைக் கொண்டு, காரில் மோதி கொலைசெய்ய முயற்சித்துள்ளனர். இதில் சிவகுமார் தப்பினார். இந்நிலையில், பரமேஸ்வரன் தனது நண்பர்கள் விமல் ஆனந்த் (42), கலைமணி (24), சுரேஷ் (24), சிலம்பரசன் (25) ஆகியோர் உதவியுடன் சிவகுமாரைத் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.
மோகனூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படையினர் பார்கவி உள்ளிட்ட 8 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.