

திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இரா.கஜேந்திர பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் 4,473 ஹெக்டேர் பரப்பில் தென்னை மரங்கள் உள்ளன. இவற்றில் அதிக மகசூல் பெற்றிட நுண்ணூட்ட கலவை உரங்கள் இட வேண்டியது அவசியம். நுண்ணூட்ட கலவை உரத்தில் இரும்புச்சத்து 3.80 சதவீதம், மாங்கனீசு 4.80 சதவீதம், துத்தநாகம் 5 சதவீதம், போரான் 1.6 சதவீதம், தாமிரச்சத்து 0.5 சதவீதம் உள்ளது.
நுண்ணூட்ட கலவையினை தென்னை மரங்களுக்கு இடுவதன் மூலம் ஒல்லிக்காய்களும், தேரைக்காய்களும் விளைவதை தடுத்து நல்ல தேங்காய் பருப்புகள், விளைச்சல் மிகுந்த தரமான தேங்காய்களை விளைவிக்கலாம்.
தென்னை நுண்ணூட்ட உரம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குடுமியான் மலை, நுண்ணூட்ட உர உற்பத்தி மையத்தில் உற்பத்தி செய்யப்பட்டு மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. தென்னை நுண்ணூட்ட உரம் விற்பனை விலை கிலோ ரூ.86.02 ஆகும்.
இந்த உரத்தை மரம் ஒன்றுக்கு 1 கிலோ வீதம் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து ஆண்டுக்கு இரண்டு முறை வட்டப்பாத்தி முறையில் இட வேண்டும். ஒரு வருட தென்னையின் தூரை சுற்றிலும் 60 செ.மீ. ஆரமுள்ள வட்டப்பாத்தி அமைத்து உரமிட வேண்டும். வருடாவருடம் வட்டப்பாத்தியை தலா 30 செ.மீ. அதிகரித்து உரத்தினை இட்டு கொத்திவிட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இவ்வாறு செய்வதால் குரும்பைகள் உதிர்வது தவிர்க்கப்பட்டு, காய் பிடிப்பு அதிகரிக்கும் இதனால் தென்னையில் கூடுதல் மகசூல் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.