

ஊரடங்கு தளர்வால், 3 மாதங்களுக்குப் பிறகு புன்செய் புளியம்பட்டி வாரச்சந்தை செயல்படத் தொடங்கியது.
கரோனா ஊரடங்கு காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உழவர் சந்தை, வாரச்சந்தை, கால்நடைச் சந்தைகள் இரு மாதங்களுக்கு மேலாக இயங்கவில்லை. தற்போது ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், புன்செய் புளியம்பட்டியில் நேற்று முதல் வாரச்சந்தை செயல்படத் தொடங்கியது. வாரம்தோறும் வியாழக்கிழமை அன்று நடைபெறும் இந்த சந்தையில், 400-க்கும் மேற்பட்ட கடைகள் மூலம் ரூ.1 கோடிக்கு மேலாக வர்த்தகம் நடைபெறுவது வழக்கம்.
கரோனா பரவல் காரணமாக ஏப்ரல் மாதம் முதல் மூடப்பட்ட வாரச்சந்தை தற்போது செயல்படத் தொடங்கியதால், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனனர். அதே நேரத்தில் வழக்கமாக நடைபெறும் மாட்டுச் சந்தைகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதேபோல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாரச்சந்தை மற்றும் உழவர் சந்தைகள் இயங்க அனுமதி அளிக்க வேண்டுமென விவசாயிகளும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.