

அதிக சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுவதைக் கண்டித்து ஈரோடு வ.உ.சி.மைதான காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரோனா பரவலைத் தொடர்ந்து ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட், வ.உ.சி. திடலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இந்த மார்க்கெட்டில் சுங்கக் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாகக் கூறி கடந்த 5-ம் தேதி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாநகராட்சி நிர்ணயித்த சுங்கக் கட்டணத்தை மட்டுமே வியாபாரிகள் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டதோடு, கட்டண விவரம் அடங்கிய அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டது.
இதனால், பாதிக்கப்பட்ட குத்தகைதாரர், வியாபாரிகளின் வாகனங்களையும், காய்கறிகளை ஏற்றி வரும் நான்கு சக்கர வாகனங்களையும் மார்க்கெட்டிற்குள் அனுமதிக்க மறுத்துள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த காய்கறி வியாபாரிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுங்கக் கட்டண பிரச்சினை தொடர்பாக ஈரோடு ஆர்.டி.ஓ. பிரேமலதா காய்கறி மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து ஆட்சியர், ஒப்பந்ததாரர், வியாபாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என ஆர்.டி.ஓ. தெரிவித்தார்.
இந்நிலையில் அதிக சுங்கக் கட்டண வசூலைக் கண்டித்து வ.உ.சி.பூங்கா மைதானத்தில் செயல்படும் 500-க்கும் மேற்பட்ட காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் கடைகளை அடைத்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து வியாபாரிகளின் ஒருங்கிணைப்பாளர் மோகன் கூறும்போது, ‘மாநகராட்சி நிர்ணயம் செய்த சுங்கக் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். அதனை மீறினால், குத்தகைதாரரின் உரிமத்தை மாநகராட்சி நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டுள்ளது', என்றார்.