அந்தியூர், அத்தாணியில் சூறைக்காற்றுடன் மழை 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழைகள் சேதம் :

அந்தியூரை அடுத்த அத்தாணியில் நேற்று முன்தினம் வீசிய சூறாவளிக் காற்றால் சேதமடைந்த வாழைமரங்கள்.
அந்தியூரை அடுத்த அத்தாணியில் நேற்று முன்தினம் வீசிய சூறாவளிக் காற்றால் சேதமடைந்த வாழைமரங்கள்.
Updated on
1 min read

அந்தியூர் மற்றும் அத்தாணி சுற்று வட்டாரப் பகுதிகளில் வீசிய சூறாவளிக் காற்றால் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் மற்றும் கூரைவீடுகள் சேதமடைந்தன.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பலத்த சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது. அந்தியூரின் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதன் காரணமாக அந்தியூர் அருகே உள்ள அத்தாணி, எண்ணமங்கலம், மந்தை, ராசாகுளம், மாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த, அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த கதளி, செவ்வாழை, மொந்தன், நேந்திரன் வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தன. மேலும் கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களும் சேதமடைந்துள்ளன.

இதேபோல் ஆலாம் பாளையம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட வீட்டின் மேற்கூரைகள் காற்றால் தூக்கி வீசப்பட்டுள்ளன. மேலும் மின்சார கம்பி மீது மரங்கள் முறிந்து விழுந்ததால், பல கிராமங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

கனமழை மற்றும் சூறாவளிக் காற்றால் விளை பொருட்கள், வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்த விவசாயிகள், அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையளவு (மி.மீட்டரில்) கவுந்தப்பாடி 22, எலந்தைக்குட்டை மேடு 19, நம்பியூர் 16, மொடக்குறிச்சி 15, கோபி 14, கொடிவேரி 12.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in