

விருதுநகர் மாவட்டத்தில் 12,492 கர்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் அருகே மல்லாங்கிணறில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணியை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், அரசின் தொடர் நடவடிக்கைகள் காரணமாக தமிழகத்தில் கரோனா தொற்று வேகமாகக் குறைந்து வருவதைப்போல. மாவட்டத்திலும் குறைந்து வருகிறது.
பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்தும் ஆர்வம் அதிகரித்து வருவதால் நாள் தோறும் தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 3,81,710 முதல் தவணை தடுப்பூசியும் அவர்களில் 85,475 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் இதுவரை தோராயமாக 25 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக தமிழக அரசின் உத்தரவுப்படி கர்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 12,492 கர்ப்பிணிகள் பயன்பெறுவார்கள், என்றார்.