

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தென்மேற்கு பருவ மழையையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்துப் பேசியதாவது:
தென்மேற்கு பருவமழை மற்றும் புயல் ஆகியவற்றால் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட பாதிப்புகளின் அடிப்படையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட கூடிய பகுதிகள், மிகுந்த பாதிப்பு ஏற்படக் கூடியவை, குறைந்த பாதிப்பு ஏற்படக் கூடியவை என வகைப்படுத்தி பட்டியல் தயார் செய்ய வேண்டும்.
வருவாய்த்துறையினர் தகவல் தொடர்புக்கு தொலைபேசி உள்ளிட்ட தேவையான சாதனங்களின் செயல்பாட்டை உறுதி செய்து கொள்ள வேண்டும். நெடுஞ்சாலைத்துறையினர் மழை, சூறைக்காற்றினால் சாலையில் விழும் மரங்களை அப்புறப்படுத்தத் தேவையான அறுவை இயந்திரங்கள், வாகனங்கள் தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு மழை பாதிப்பு குறித்து பொதுமக்கள் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, கோட்டாட்சியர்கள் மு.கோட்டைக் குமார், தே.இளவரசி, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சோமசுந்தரம், தனி வட்டாட்சியர் பச்சைமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.