

கோபியை அடுத்த தூக்கநாயக்கன் பாளையம் வனச்சரகத்தில் புலி, யானை, மான் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளன. வனப்பகுதியில் வறட்சி காரணமாக, வனவிலங்குகள் விவசாய தோட்டப்பகுதிகளுக்கு உணவு, குடிநீர் தேடி வருவது அதிகரித்துள்ளது.
இந்நிலையில், வேட்டையம் பாளையம் காலனி பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில், முகாமிட்டு இருந்த புள்ளி மான் கூட்டத்தில் ஒரு மான் குட்டி தனித்து விடப்பட்டது. மூன்று மாதமான அந்த மான்குட்டியை நாய்கள் கூட்டம் சுற்றி வளைத்து கடித்ததில் உயிரிழந்தது. நேற்று காலை இதனைப் பார்த்த விவசாயிகள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் இறந்த மான்குட்டியை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
தனது குட்டி உயிரிழந்தது தெரியாமல், அதன் தாய் மான் தனது இதர குட்டிகளுடன் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில், பாசத்துடன் தேடி வருகிறது. மானுடன் உள்ள இதர குட்டிகளை நாய்கள் கடித்து விடும் என்பதால், அவற்றைப் பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என இப்பகுதி மக்கள் வனத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.