

மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது.
தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு அனுமதியின்றி கட்டியுள்ள அணையை இடிப்பதற்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
ஆனால், ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதிக்காமல், சற்று முன்னதாக விவசாயிகளை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால், இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் 85 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து பேச்சுவார்த்தை நடத்த வந்த மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமாரிடமும் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வெளியே வந்த அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆட்சியர் சு.சிவராசு, எம்எல்ஏ எஸ்.இனிகோ இருதயராஜ் ஆகியோர் விவசாயிகள் போராட்டம் நடத்துவதை அறிந்து, போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்தனர். அவர்களிடம் பி.அய்யாக்கண்ணு கோரிக்கை மனுவை அளித்தார்.
‘நானும் சேர்ந்து சொல்கிறேன்’
விவசாயிகளின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு உறுதுணையாக இருக்கும். நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம். மேகேதாட்டுவில் அணை கட்டக் கூடாது என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக மாநில நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லியில் மத்திய நீர்வளத் துறை அமைச்சரைச் சந்தித்துள்ளார். அந்தவகையில், நானும் சேர்ந்து சொல்கிறேன், மேகேதாட்டு அணையைக் கட்டக் கூடாது என்றார். அமைச்சரின் இந்தப் பேச்சை விவசாயிகள் கைத் தட்டி வரவேற்று ஆரவாரம் செய்தனர்.
தொடர்ந்து, அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது, ‘‘தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டியுள்ளது குறித்து நீதிமன்றத்தை நாடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக அரசின் மூலம் என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அது கண்டிப்பாக எடுக்கப்படும்’’ என்றார்.