Published : 05 Jul 2021 03:12 AM
Last Updated : 05 Jul 2021 03:12 AM

கடன் வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி - ஊராட்சித் தலைவர் வீட்டில் போலீஸார் சோதனை :

ரூ.2.85 கோடி மோசடி புகாரின்பேரில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே ஊராட்சித் தலைவர் வீடு உள்ளிட்ட இடங்களில் கோவை குற்றப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர்.

ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் பன்னீர்செல்வம்(56). இவரிடம், கோவையில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நடத்தி வரும் மாதேஸ்வரன் என்பவர் தனது மருத்துவமனைையை மேம்படுத்துவதற்கு கடன் பெற்றுத் தருமாறு நண்பர்கள் மூலம் அணுகியுள்ளார்.

அதற்கு ரூ.100 கோடி கடன் பெற்று தருவதாகக் கூறி, அதற்கு கமிஷன் ரூ.2 கோடி, ஆவணச் செலவுக்கு ரூ.85 லட்சம் என ரூ.2.85 கோடி மற்றும் ஆவணங்களை மாதேஸ்வரனிடமிருந்து பன்னீர்செல்வம் பெற்றதாக கூறப்படுகிறது. பல மாதங்களாகியும் கடன் பெற்றுத் தரவில்லை என்றும், கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதற்கு மிரட்டுவதாகவும் பன்னீர்செல்வத்தின் மீது கோவை குற்றப்பிரிவில் மாதேஸ்வரன் அண்மையில் புகார் அளித்தார்.

அதன்பேரில், ஆலங்குடி குறிஞ்சி நகர், ஆண்டிகுளம் ஆகிய இடங்களில் உள்ள பன்னீர்செல்வத்துக்குச் சொந்தமான வீடு, 2 பெட்ரோல் பங்க் உள்ளிட்ட 5 இடங்களில் கோவை மத்தியக் குற்றப் பிரிவு உதவி ஆணையர் பார்த்திபன் தலைமையிலான போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். சுமார் 5 மணி நேரம் சோதனை நடைபெற்றது. மேலும், தலைமறைவாகி உள்ள பன்னீர்செல்வத்தை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x