

கொல்லிமலை அடிவாரத்தில் உற்பத்தியாகி பாய்ந்தோடும் பெரியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது தொடர்பாக சேலம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கொல்லிமலை அடிவாரத்தில் பெரியாறு உற்பத்தியாகிறது. இங்கு உற்பத்தியாகும் தண்ணீர் நடுக்கோம்பை, துத்திக்குளம் வழியாக சின்னகுளம், பொம்ம சமுத்திரம் ஆகிய ஏரிகளை சென்றடைகிறது. பின்னர், பொன்னார் ஏரி, தூசூர் ஏரி, ஆண்டாபுரம் ஏரி வழியாக திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே காவிரியில் கலக்கிறது.
தண்ணீரை தேக்கி வைத்து தடுப்பணை அமைத்தால் இப்பகுதியில் உள்ள விளை நிலங்கள் பயன்பெறும் என்றும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும் வாய்ப்பாக அமையும் என்றும் அப்பகுதி விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்பலனாக பெரியாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக சேலம் பொதுப் பணித்துறை வடிவமைப்பு செயற்பொறியாளர் பிரகாஷ் தலைமை யிலான அதிகாரிகள் பெரியாறு பகுதியில் தடுப்பணை அமைப்பதற்கான இடத்தைப் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். மேலும், இதன்மூலம் பயன்பெறும் பாசனஆயக்கட்டு பரப்பு குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண் டனர்.
ஆய்வறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டு, அதன்பின்னர் தடுப்பணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும், என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆய்வின்போது, சேந்தமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினர் பொன்னுசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.