திருவண்ணாமலையில் குடிநீர் வழங்காத நகராட்சியை கண்டித்து காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
திருவண்ணாமலையில் குடிநீர் வழங்காத நகராட்சியை கண்டித்து காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

குடிநீர் வழங்காத தி.மலை நகராட்சியை கண்டித்து - காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் : காவல் துறையினர் சமரச பேச்சுவார்த்தை

Published on

திருவண்ணாமலையில் குடிநீர் வழங்காத நகராட்சியைக் கண்டித்து காலிக் குடங்களுடன் பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாத்தனூர் அணையில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் திருவண்ணாமலை நகரில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. திருவண்ணாமலை நகராட்சி சார்பில் குடிநீர் வழங்கும் பணி கண்காணிக்கப்படுகிறது.

இந்நிலையில், தி.மலை நகரில் ஓரிரு இடங்களில் குடிநீர் விநியோகம் தடைபட்டு போவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, பே கோபுர வீதிகளில் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட் டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த பே கோபுர வீதிகளில் வசிக்கும் பொது மக்கள் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். பே கோபுர வீதியில் கழிகளை கொண்டு தடையை ஏற்படுத்தி, காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் கூறும்போது, "கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. எங்கள் பகுதி மேடான பகுதி என்பதால், பெரிய குழாய் அமைத்து, அதன் மூலம் குடிநீர் வழங்க வலியுறுத்துகிறோம்.

குடிநீர் தட்டுப்பாடு குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் பலனில்லை. லாரி மூலமாக குடிநீர் வழங்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. குடிநீருக்காக தவித்து வருகிறோம். எங்களது கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றி, சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த தி.மலை நகர காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பேரில் சாலை மறியல் முடிவுக்கு வந்தது. இதனால், திருவண்ணாமலையில் இருந்து செங்கம் மற்றும் தண்டராம்பட்டு மார்க்கங்களில் இயக்கப்படும் வாகனங்களின் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக் கப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in