

ஈரோட்டில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஈரோடு வஉசி பூங்கா பகுதியில் செயல்பட்டு வந்த காய்கறி மார்க்கெட் ஈரோடு பேருந்து நிலைய வளாகத்துக்கு மாற்றப்பட்டது. ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதையடுத்து நாளை (5-ம் தேதி) முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. இதனால் காய்கறி மார்க்கெட் நாளை முதல் மீண்டும் வஉசி பூங்கா பகுதியில் செயல்படத் தொடங்கும், என ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
ஈரோட்டில் நாளை முதல் பேருந்து சேவை மீண்டும் தொடங்க உள்ளது. எனவே, பேருந்து நிலைய வளாகத்தில் செயல்பட்டு வந்த காய்கறி மார்க்கெட் மீண்டும் வஉசி பூங்காவுக்கு மாற்றப்பட்டு செயல்பட தொடங்கும். இங்கு வழக்கம் போல் மொத்த வியாபாரமும், சில்லரை வியாபாரமும் நடைபெறும்.
மாநகராட்சி சார்பில் பணியாளர்கள் அங்கு சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை வியாபாரிகளும், காய்கறி வாங்க வரும்போது மக்களும் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.