Published : 04 Jul 2021 03:15 AM
Last Updated : 04 Jul 2021 03:15 AM
வழிபாட்டுத் தலங்களை திறக்கலாம் என்ற முதல்வரின் உத்தரவை அடுத்து தி.மலை அண்ணாமலையார் கோயிலில் முன்னேற்பாடு பணிகள் நேற்று முழுவீச்சில் நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்த லுக்கு பிறகு கரோனா தொற்று பரவல் அதிகரித்ததால், தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதன் எதிரொலியாக, வழிபாட்டுத் தலங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க, சுவாமி தரிசனம் மற்றும் வழிபாடு செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், கரோனா தொற்று பரவல் குறைந்து வருவதாக சுகாதாரத் துறையினர் கூறி வரும் நிலையில், வழிபாட்டுத் தலங்களில் 5-ம் தேதி (நாளை) சுவாமி தரிசனம் மற்றும் வழிபாடு செய்ய 2 மாதங்களுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை அடுத்து, தி.மலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் முன்னேற்பாடு பணிகள் நேற்று முழு வீச்சில் தொடங்கின. மேலும், ஆடி மாதம் 1-ம் தேதி தொடங்கவுள்ள தட்சிணாயன புண்ணியகால பிரம்மோற்ஸவ கொடியேற்றம் அடுத்த வாரம் நடைபெறவுள்ளதால், மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்கக் கொடி மரம் மற்றும் பீடம் ஆகியவற்றை ஊழியர்கள் சுத்தம் செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக, கோயிலில் உள்ள உட்பிரகாரங்கள் மற்றும் தடுப்பு கம்பிகள் சுத்தம் செய்யப்பட்டன. மேலும், வழிகாட்டு நெறிமுறைகளில் ஒன்றான தனி மனித இடைவெளியை கடைபிடிக்க, வரிசையில் பக்தர்கள் காத்திருக்கும் பாதையில் வட்டமிடப்பட்டுள்ளது. ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக பக்தர்களை அனுமதிக்க கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்யப்படவுள்ளது. மேலும், சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் முன்னேற்பாடு பணிகள் நடைபெறுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT