

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் திரவ ஆக்சிஜன் கொள்கலன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம், வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி, எஸ்பி சசிமோகன், திட்ட இயக்குநர் பிரதிக் தயாள், டி.ஆர்.ஓ. முருகேசன், மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஈரோடு ஊத்துக்குளி, நல்லம்பட்டி, தாளவாடி ஆகிய பகுதிகளில் குளிர்பதனக் கிடங்கு, மஞ்சள் ஏற்றுமதி மையம் தரம் உயர்த்துதல் மற்றும் ஈரோட்டில் உணவுப் பூங்கா அமைத்தல் ஆகிய பணிகளை செயல்படுத்துவது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
தாளவாடியில் மூலிகைப்பண்ணை, சத்தியமங்கலத்தில் நறுமணத் தொழிற்சாலை, ஈரோட்டில் இந்திய ஜவுளி தொழில் நுட்ப அறிவியல் பல்கலைக்கழகம் தொடங்குதல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஈரோடு அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி, புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு தொடங்க அதிகாரிகள் கருத்துக்களைத் தெரிவித்தனர். ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை மற்றும் பவானி, கோபி, சத்தியமங்கலம், கொடுமுடி, கவுந்தப்பாடி, அந்தியூர் ஆகிய அரசு மருத்துவமனைகளில் திரவ ஆக்சிஜன் கொள்கலன் அமைத்தல் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நம்பியூரில் இஎஸ்ஐ மருத்துவமனை தொடங்குதல் குறித்து அதிகாரிகளிடம் கருத்துகள் பெறப்பட்டது.
மேலும், பெருந்துறையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், தோல் மற்றும் சாயத் தொழிற்சாலைகளிலிருந்து கழிவுநீர் காலிங்கராயன் கால்வாயில் கலக்காமல் தடுக்க ஆலோசனை செய்யப்பட்டது. பாண்டியாறு-புன்னம்புழா திட்டம் நிறைவேற்றுதல், மணியாச்சி, வரட்டுப் பள்ளம், வழுக்குப் பாறை ஆறுகளை இணைத்து அந்தியூர், அம்மா பேட்டை ஒன்றியங்களில் நீர்ப்பாசன வசதிகள் பெருக்குதல் பணிகள் குறித்தும், தோணிமடுவு பாசனத் திட்டம் செயல்படுத்துதல், மேட்டூர் உபரிநீரைக் கொண்டு சென்று ஆப்பக்கூடல் பகுதியில் உள்ள ஏரிகளை நிரப்புதல், அந்தியூர் அருகே பட்லூரில் புதிய அணை கட்டுதல் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஈரோட்டில் அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் அரசு சட்டக் கல்லூரி தொடங்குதல் குறித்தும், தமிழ்நாடு வீட்டு வசதி பிரிவு சார்பில் புறநகர் பகுதிகளில் நவீன வசதிகளுடன் கூடிய துணை நகரங்கள் அமைக்கும் பணி குறித்தும் கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டங்கள் குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அவற்றை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.