ஈரோடு, சேலம் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை : மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
ஈரோடு, சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு சூறைக் காற்றுடன் மழை பெய்த நிலையில், சில இடங்களில் மரங்கள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால், ஈரோடு அகில்மேடு வீதி, நாச்சியப்பா வீதி, மணிக்கூண்டு உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். முக்கிய சாலைகளில் தேங்கிய மழைநீரால் வாகனஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
சித்தோடு பகுதியில் ஈரோடு - சத்தியமங்கலம் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல், பலத்த காற்றால் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் மரங்கள் சாலையில் விழுந்தன. ஈரோடு நகரில் மேட்டூர் சாலை சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் விழுந்தது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக கவுந்தப்பாடியில் 65 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
ஈரோடு மாவட்ட மழை நிலவரம் (மி.மீ). பவானிசாகர் 62, கோபி 29, ஈரோடு 24, கொடுமுடி 22, எலந்தகுட்டைமேடு 19, நம்பியூர் 10, மொடக்குறிச்சி 8, குண்டேரிப்பள்ளம் 7.
சேலத்தில் கனமழை
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு ஆத்தூர் மற்றும் தலைவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் வானில் கார்மேகம் சூழ்ந்து இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
சேலம் மாநகர பகுதியில் இரவு 9 மணிக்கு பலத்த காற்றுடன், இடி, மின்னல் வெட்டுடன் கனமழை கொட்டியது. கன மழையால் சாலைகளிலும், கால்வாய்களிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளான நாராயணன் நகர், பச்சப்பட்டி, தாதுபாய்குட்டை ரோடு, நான்கு ரோடு, அரிசிபாளையம், லீ - பஜார், செவ்வாய்ப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. அழகாபுரம் காவல் நிலையம் பின்புறம் உள்ள கூட்டுறவு மண்டபம் அருகே மரம் சாய்ந்து மின் கம்பி மீது விழுந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, மரத்தை அப்புறப்படுத்தினர்.
உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோயில் அருகே உள்ள சாலையில் இருந்த ஆலமரம் மழையால் சாய்ந்து விழுந்தது. இதனால், உத்தமசோழபுரத்தில் இருந்து கொண்டலாம்பட்டி செல்லும் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினர்.
சேலம் மாவட்டம் முழுவதும் பதிவான மழை அளவு (மில்லி மீட்டர்) : ஆத்தூர் -70.8, ஓமலூர் - 63.4, சேலம் - 47.2, வீரகனூர் - 38.5, ஏற்காடு - 33, காடையாம்பட்டி -29, பெத்தநாயக்கன்பாளையம் - 32.1, கெங்கவல்லி -25, ஆணைமடுவு -20, கரியகோவில் -14, மேட்டூர் -8.6, சங்ககிரி -5, எடப்பாடி -2.6, வாழப்பாடி - 2 மி.மீ. மழை பெய்தது.
