

பழங்குடியினரின் வீடுகள் சேதமடைந்தால் உடனடியாக சீரமைத்துத் தர வேண்டும், என நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா சிங் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
நாமக்கல் மாவட்டம் கொல்லி மலை ஒன்றிய அலுவலகத்தில், ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமையில், அனைத்துத் துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சேந்தமங்கலம் எம்.எல்.ஏ பொன்னுசாமி மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அலுவலர்களிடம் ஆட்சியர் கேட்டறிந்தார். ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார்.
தோட்டக்கலைத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் காபி சாகுபடி, மிளகு மற்றும் பலா உற்பத்தி, விற்பனைகள் குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார்.
மேலும், பழங்குடியினர் வசித்து வரும் வீடுகள் சேதமடைந்தால் உடனடியாக புதுப்பித்து தர சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கொல்லிமலையில் சுற்றுலா இடங்களை மேம்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, கொல்லி மலை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் சாலை அமைக்கும் பணியின் தரம் குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கோ.மலர்விழி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பொ.பாலமுருகன், மகளிர் திட்ட இயக்குநர் மா.பிரியா, மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலர் சக்திவேல், கொல்லிமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.