அதிக விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை : நெல்லை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு நிர்ணயித்த விலையைவிட அதிக விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு எச்சரித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அனைத்து உர விற்பனை நிலையங் களிலும் விலைப் பட்டியல் விவசாயிகளின் பார்வையில் தெரியும்படி வைக்க வேண்டும். விற்பனை முனையக்கருவி மூலம் உரங்கள் முறையாக விநியோகம் செய்யப்பட வேண்டும். தவறும்பட்சத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உரவிலை இருப்பு பலகையில், புகார் தெரிவிக்க வேண்டிய செல்போன் எண்களை குறிப்பிட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலைக்கு மேல் விற்றால் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உரிமமும் ரத்து செய்யப்படும்.
யூரியா (45 கிலோ) மூட்டை ரூ.266.50, பொட்டாஷ் (50 கிலோ) -ரூ.1000, சூப்பர் பாஸ்பேட் உரம் (50 கிலோ) ரூ.390 முதல் ரூ.420 வரையிலும் விற்பனை செய்ய வேண்டும்.
ஆர்சிஎப் பொட்டாஷ் 50 கிலோ மூட்டை விலை ரூ.875-க்கும், அம்மோனியம் குளோரைடு உரம் ரூ.750-க்கும், அம்மோனியம் சல்பேட் உரம் ரூ.850-க்கும் விற்பனை செய்யப்பட வேண்டும். விவசாயிகள் உரங்கள் வாங்கும் போது மூட்டையில் அச்சடிக்கப்பட்ட விலையை பார்த்து அதற்கு மிகாமல் வாங்க வேண்டும்.
அப்போது ஆதார் அட்டையை கொண்டு செல்ல வேண்டும். உரம் வாங்கியதற்கான ரசீதை கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். விவசாயிகள் சாகுபடி மேற்கொள்ளும் போது மண்வள அட்டை பரிந்துரையின்படி உரமிட வேண்டும். புகார்களை தெரிவிக்க வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித் துள்ளார்.
