செய்யாறில் நடந்த கரோனா தடுப்பூசி முகாமில் - தனி மனித இடைவெளியின்றி குவிந்த மக்கள் : மருத்துவ குழுவினர் திணறல்

செய்யாறில் நடந்த கரோனா தடுப்பூசி முகாமில் -  தனி மனித இடைவெளியின்றி குவிந்த மக்கள் :  மருத்துவ குழுவினர் திணறல்
Updated on
1 min read

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற முகாமில் கோவாக்சின் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள தனி மனித இடைவெளி இல்லாமல் பொதுமக்கள் திரண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தட்டுப்பாடு காரண மாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் நடைபெறுகிறது.

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது. கோவாக்சின் தடுப்பூசியின் எண்ணிக்கை குறை வாக வந்துள்ளதாக தகவல் வெளியான தால், முகாம் நடைபெறும் பகுதிக்கு பொதுமக்கள் அதிகளவில் கூடினர். பொதுமக்கள் அனைவரும் தனி மனித இடைவெளியை கடைபிடிக்காமல், முண்டியடித்துக் கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள முயன்றனர். இதனால், கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கும் சூழல் நிலவியது.

அவர்களை, ஒழுங்குப்படுத்தும் முயற்சியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டபோதும் பலனில்லை. இதனால், தடுப்பூசி செலுத்தப்படும் இடத்தில் இருந்த மருத்துவக் குழுவினர் திணறினர். பின்னர், இது குறித்து தகவல் தெரிவித்த பிறகு, முகாம் நடைபெறும் பள்ளிக்கு வந்த காவல்துறையினர், கூட்டத்தை ஒழுங்குப்படுத்தினர்.

கோவாக்சின் தடுப்பூசியின் அளவு குறைவாக இருந்ததால், இரண்டாம் கட்டமாக கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஆண் மற்றும் பெண் என இருபாலருக்கும் தனித் தனியாக அறைகளை ஒதுக்கி, காவல்துறை ஒத்துழைப்புடன் தடுப்பூசியை செலுத்தினால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என்பதே அனைவரது கோரிக்கையாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in