

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா காவல் நிலையம் அருகேயுள்ள மகாதேவன் மளிகை வீதியில் ஹயாத் கான் என்பவர் அரிசி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர், வியாபாரத் தில் கிடைக்கும் பணத்தை தினசரி கடையில் உள்ள லாக்கரில் வைத்துச் செல்வார்.
இந்நிலையில், ஹயாத்கான் வழக்கம்போல் கடையை நேற்று திறந்த போது, மேற்கூரை ஓட்டை பிரித்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். நள்ளிரவில் ஓட்டைப் பிரித்து அதன் வழியாக இறங்கிய மர்ம நபர்கள் லாக்கரில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது. இது குறித்த தகவலின்பேரில் வாலாஜா காவல் நிலைய ஆய்வாளர் காண்டீபன் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். அங்கு மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்ததுடன், அவர்கள் குறித்த விவரங்கள் குறித்தும் விசாரித்து வருகிறார்.