

திருநெல்வேலி -தென்காசி, திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில் வழித்தட வேகத்தை மணிக்கு 70 கி.மீ.-ல் இருந்து 100 கி.மீ. ஆக அதிகரிக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தென் மாவட்டங்களில் பெரும்பாலான வழித்தடங்களில் மின்மயமாக்கல் பணிகள் மற்றும் இரட்டை அகல ரயில் பாதை பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அத்துடன், தமிழகத்தில் குறைந்தபட்சம் 130 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயங்கும் வகையில் ரயில்வே கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களிலிருந்து இயக்கப்படும் ரயில்களில் மதுரை – சென்னை தேஜஸ் ரயில் அதிகபட்சமாக மணிக்கு 79 கி.மீ வேகத்தில் பயணம் செய்து 493 கி.மீ தூரத்தை 6 மணி 15 நிமிடங்களில் கடக்கிறது.
பாவூர்சத்திரத்தை சேர்ந்த பாண்டியராஜாவுக்கு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மதுரை கோட்ட மூத்த பொறியாளர் முகைதீன் பிச்சை அளித்துள்ள பதில்:
`விருதுநகர் - தென்காசி வழித்தட வேகம் 100- ல் இருந்து 110 கிமீ ஆகவும், திருநெல்வேலி - திருச்செந்தூர், திருநெல்வேலி - தென்காசி, ஆகிய தடங்களின் வேகம் 70-ல் இருந்து 80 கிமீ வரை அதிகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை ரயில்வே கோட்டத்தில் மின் மயமாக்கல் பணி வேகமாக நடைபெறுவதுடன், ரயில் வழித்தடங்களின் வேகங்கள் அதிகரிக்கும் பணிகளும் நடைபெற்று வருவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் பயண நேரம் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது என்று பயணிகள் தெரிவித்தனர்.
திருநெல்வேலி - திருச் செந்தூர், திருநெல்வேலி- தென்காசி, தடங்களின் வேகம் 70-ல் இருந்து 80 கிமீ வரை அதிகரிக்கும் பணி நடைபெறுகிறது