

குழந்தைத் திருமணம் தொடர்பான புகார்களை 181 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
குழந்தைத் திருமணங்களை தடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்துப் பேசியதாவது:
கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், குழந்தைத் திருமணங்கள் நடைபெறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. குழந்தைத் திருமணங்கள் நடைபெறாமல் தடுக்க தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் தங்கள் பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
18 வயது நிறைவடையாத பெண் குழந்தைக்கோ, 21 வயது நிறைவடையாத ஆணுக்கோ திருமணம் செய்வது குற்றமாகும். மீறுவோர் மீது குழந்தைத் திருமணத் தடைச் சட்டதின்படி 2 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். ஆசிரியைகள் மற்றும் மாணவியர் தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவியர்களுக்கு குழந்தைத் திருமணம் நடைபெறுவது தெரியவந்தால் உடனடியாக 1098 என்ற சைல்டு லைன் இலவச தொலைபேசி எண் அல்லது 181 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரியப்படுத்த வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் 2021-ம் ஆண்டில் ஜனவரி முதல் தற்போது வரை 1098 இலவச தொலைபேசி எண்ணுக்கு வந்த 113 புகார்களின் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதில், 29 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், 65 குழந்தைத் திருமணங்களில் பெற்றோர் உள்ளிட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 19 புகார்களில் பெண்களின் திருமண வயது 18 வயதுக்கு மேல் என்பது கண்டறியப்பட்டு புகார்கள் தவறானவை என்பது தெரிய வந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.
மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் த.கா.சித்ரா, மாவட்ட சமூக நல அலுவலர் கீதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதப்பிரியா, குழந்தைகள் நலக்குழும தலைவர் ச.கோகிலவாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.