

கீழ்பென்னாத்தூர் வட்டாரத்தில் பணம் முறைகேட்டில் ஈடுபட்ட தோட்டக்கலை துறை அலுவலர்மீது லஞ்ச ஒழிப்பு பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தி.மலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டார தோட்டக்கலை துறை அலுவலராக கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை பணியாற்றியவர் அன்பரசு (32). இவர், பணியாற்றிய காலத்தில் விவசாயிகளுக்கான காய்கறி உற்பத்தி திட்டத்தில் போலி ரசீதுகளை சமர்ப்பித்து அரசு வழங்கிய பணத்தில் பல லட்சம் முறைகேடு செய்துள்ளதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக திருவண்ணா மலை மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் மைதிலி விசாரணை செய்துள்ளார். அதில், தமிழக தோட்டக்கலை துறை சார்பில் தேர்வு செய்யப்பட்ட வட்டாரத்தில் விவசாயிகள் வருவாய் ஈட்டுவதற்காக பயிற்சி அளிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில், ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ.1,500 வீதம் வழங்கப்பட்டு பயிற்சியுடன் கூடிய சுற்றுலா அழைத்துச் செல்லப்படும்.
இதற்காக, கடந்த 2014-ல் இரண்டு கட்டங்களாக ரூ.1.50 லட்சம் என ரூ.3 லட்சம் தொகை யும், கடந்த 2015-ம் ஆண்டு ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.6 லட்சம் தொகையை திருவண்ணாமலை மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குநர் மூலமாக பெற்றுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் 6 மற்றும் 7-ம் தேதியும், அதே மாதத்தில் 18 மற்றும் 19-ம் தேதியும் கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 மற்றும் 11-ம் தேதியும் விவசாயிகளை பயிற்சிக்கான சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளதாக பல் வேறு ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.
இந்த ஆவணங்களை ஆய்வு செய்ததில் பல ரசீதுகள் போலி யானது என தெரியவந்துள்ளது. விவசாயிகளை அழைத்துச் சென்ற பேருந்து கட்டணம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக இருந்த ஒரு பேருந்தின் பதிவெண் மற்றும் விவசாயிகளை அழைத்துச் சென்ற தேதியை வைத்து வட்டார போக்குவரத்து அலுவலகம் உதவியுடன் ஆய்வு செய்ததில் அந்த குறிப்பிட்ட தேதியில் அந்தப் பேருந்து சபரிமலைக்கு பக்தர்களை ஏற்றிச்சென்றிருந்தது தெரிய வந்தது.
தொடர் விசாரணையில், அரசு வழங்கிய பணத்தில் ரூ.875 அளவுக்கு மட்டுமே செலவு செய்திருப்பது தெரியவந்தது. மொத்தம் பெறப்பட்ட ரூ.6 லட்சம் தொகையில் ரூ.3 லட்சம் அளவுக்கு முறைகேடு செய்யப்பட்டதுடன் அதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்திருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தோட்டக்கலை அலுவலர் அன்பரசு மீது போலி ரசீதுகளை சமர்ப்பித்து பணம் மோசடி செய்ததாக சமீ பத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.