பருவமழை பெய்யாததால் நிலத்தடி நீர் மட்டம் சரிவு - மேட்டூர் அணை கிழக்கு, மேற்கு கால்வாயில் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை :

பருவமழை பெய்யாததால் நிலத்தடி நீர் மட்டம் சரிவு -  மேட்டூர் அணை கிழக்கு, மேற்கு கால்வாயில் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை :
Updated on
1 min read

மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாயில் பாசனத்துக்கு முன் கூட்டியே தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய் மூலம் 45 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கால்வாய் பாசனத்துக்கு உட்பட்ட விளை நிலங்களில் குறுவை சாகுபடிக்காக ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

கிழக்கு கரை கால்வாய்க்கு உட்பட்ட பூலாம்பட்டி, பில்லுக்குறிச்சி, பொன்னம்மபாளையம், மூலப்பாதை, குள்ளம்பட்டி, செட்டிப்பட்டி, கள்ளம்பாளையம், அம்மாபாளையம், புதுப்பாளையம், புல்லாக்கவுண்டம்பட்டி வழியாக நாமக்கல் மாவட்டத்துக்கு உட்பட்ட குப்பாண்டம்பாளையம், வெப்படை வழியாக தண்ணீர் சென்று காவிரியில் கலக்கிறது.

கிழக்கு கரையைச் சேர்ந்த பாசன விவசாயிகள் பெரும்பாலானோர் நடப்பாண்டு கரும்பு, மஞ்சள், பருத்தி, சோளம், கத்தரி, வெண்டை, மக்காச்சோளம் உள்ளிட்டவை பயிரிட்டுள்ளனர். கடந்த ஒரு மாதமாக மழை இல்லாததால், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து, பாசனத்துக்கும், கால்நடை வளர்ப்பிற்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

எனவே, நடப்பாண்டு, ஆகஸ்ட் மாதம் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீரை முன் கூட்டியே திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக கால்வாய் பாசன விவசாயிகள் கூறும் போது, ‘நடப்பாண்டு ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் இருந்த நிலையில், தேவையான மழை விவசாய பகுதிகளில் பெய்யவில்லை. மேலும், கிணறுகளிலும், ஆழ்துளை கிணறுகளிலும் நீலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால், பாசனத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

எனவே, ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் மேட்டூர் அணையின் கால்வாய் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரை முன் கூட்டியே திறந்து விட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in