

ஜிப்மரின் ‘லேசிக்’ சிகிச்சை மையத்தை நிறுவன இயக்குநர் டாக்டர் ராகேஷ் அகர்வால் நேற்று திறந்து வைத்தார். அவருடன் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சகா வினோத் குமார், அத்துறை பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் போது கண் மருத்துவத்துறை தலைவர் டாக்டர் சுபாஷினி பேசுகையில், "'லேசிக்' என்பது கண்ணாடி அணிவதை தவிர்ப்பதற்காக செய்யப்படும் அறுவை சிகிச்சை. கண்ணின் கருவிழியை மறுவடிவமைக்கும் ஒரு செயல்முறையாகும். இது மயோபியா (கிட்டப் பார்வை). ஹைபாரோபியா (தூரப் பார்வை) மற்றும் ‘அஸ்டிஜிமாடிசம்’ போன்ற கண்பார்வை குறைபாட்டில் கண்ணாடிகள் அல்லது காண்டாக்ட் லென்ஸ்கள் பயன்படுத்தாமல் சீரான பார்வையை பெற உதவும் சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சை இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். வெளிநோயாளிகள் அடிப்படையில் செய்யப்படும் இந்த சிகிச்சைக்கு 15 முதல் 20 நிமிடங்கள் மட்டுமே ஆகும். மேலும் இது ஒரு வலியற்ற செயல்முறை ஆகும். இந்த லேசர் இயந்திரத்தை பெற்ற தென்னிந்தியாவின் இரண்டாவது அரசு மருத்துவமனையாக ஜிப்மர் விளங்குகிறது. ரூ. 5 கோடி மதிப்புள்ள இந்த இயந்திரத்தின் மூலம் லேசிக், எபி-லேசிக், பிஆர்கே (ஃபோட்டோரிஃப்ரேக்டீவ் கெரடாடமி), டிரான்ஸ்-பிஆர்கே, கான்டூரா உள்ளிட்ட சிகிச்சைகளை செய்ய முடியும். ‘கெரடோகோனஸ்’ எனப்படும் ஒரு கண் நோய் பாதிப்பை குறைக்க ‘கொலாஜன் கிராஸ் லிங்கிங் யூனிட்’டை ஜிப்மர் வாங்கியுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் இந்த அறுவை சிகிச்சைகளுக்கு ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் வரை செலவாகும். ஆனால் ஜிப்மரில் மானியத்துடன் வெறும் பத்தாயிரம் முதல் பதினைந்தாயிரம் ரூபாய் வரை மட்டுமே செலவாகும் என்று தெரிவித்தார்.