

பெரம்பலூர்: மூன்றாம் பாலினத்தவர்கள், கோயில்களில் ஊதியமின்றி பணிபுரிபவர்கள், திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் விண் ணப்பித்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் வெங்கட பிரியா தலைமை வகித்தார். எம்எல்ஏ எம்.பிரபாகரன், மாவட்ட ஊராட்சித் தலைவர் சி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், மூன்றாம் பாலினத்தவர்கள் 51 பேருக்கு ரூ.1.02 லட்சம் நிதியுதவி, 192 கோயில்களைச் சேர்ந்த மாத ஊதியமின்றி பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சார்யார்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்கள் என 241 பேருக்கு ரூ.9.64 லட்சம் ரொக்கம் மற்றும் 10 கிலோ அரிசியுடன் 15 வகையான மளிகைப் பொருட்கள், திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 203 படித்த ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு ரூ.57 லட்சம் நிதியுதவி மற்றும் ரூ.79.35 லட்சம் மதிப்பிலான 1,624 கிராம் தாலிக்கு தங்கம் என மொத்தம் ரூ.1.46 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கிப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் இரா.சுதர்சன், மாவட்ட வருவாய் அலுவலர் செ.ராஜேந்திரன், மாவட்ட சமூக நல அலுவலர் தமீமுனிசா உட்பட பலர் கலந்துகொண்டனர்.