

தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
ரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி மாணவர் சேர்க்கை அதிகளவில் உள்ளதால், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், போதிய ஆசிரியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள 120 கல்வி மாவட்டங்களிலும் தலா 4 அல்லது 5 மாதிரி பள்ளிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் மழலையர் பள்ளிகளை அதிகமாக தொடங்குவது குறித் தும் ஆலோசனை நடத்தப்படும்.
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை ஜூலை 31-ம் தேதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனித் தேர்வர்களுக்கு வழக்கமாக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தேர்வு நடைபெறும். அப்போது விருப்பத் தேர்வு எழுத விரும்பும் பிளஸ் 2 மாணவர்களும் தேர்வெழுதலாம். அப்போது, கரோனா கட்டுப்பாட்டுக்குள் இருந்தால்தான் இந்தத் திட்டம். இல்லையெனில், அரசு என்ன முடிவெடுக்கிறதோ அதைப் பொறுத்து முடிவு எடுக்கப்படும்.
தமிழகத்தில் 5.50 லட்சம் தனியார் பள்ளி ஆசிரியர்கள் உள்ளனர். பள்ளிகள் திறக்கப் படாத நிலையில், அவர்களது நிலை வேதனை அளிப்பதாக உள்ளது. அவர்களின் வாழ்வா தாரத்தைக் காப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆய்வின்போது ரங்கம் எம்எல்ஏ எம்.பழனியாண்டி உடனிருந்தார்.