Published : 29 Jun 2021 06:12 AM
Last Updated : 29 Jun 2021 06:12 AM
தமிழக கோயில்களில் தினக்கூலி, தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சிக் காலங்களிலும், அதிமுக அரசிலும் தெய்வீகம், ஆன்மிகம், கோயில்கள் மற்றும் அதன் பணி\யாளர்களின் மேன்மை போற்றிப் பாதுகாக்கப்பட்டது.
நான் முதல்வராக இருந்தபோது, தற்காலிகமாக பணிபுரியும் கோயில் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, முதல்கட்டமாக 2019 ஜூலை 31-ம் தேதி வரை 5 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றிய 2,000 தினக்கூலிகள் மற்றும் தொகுப்பூதிய ஊழியர்களின் பணித் தகுதி அடிப்படையிலும், காலி பணியிடங்களை கணக்கில் கொண்டும் காலமுறை ஊதியம் வழங்கி, பணி நிரந்தரம் செய்யப்படும் என்று அறிவித்தேன்.
மேலும், மாநிலம் முழுவதும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் தற்காலிகப் பணியாளர்கள் பட்டியலை தயாரித்து, அரசுக்கு அனுப்பும்படி அறநிலையத் துறை ஆணையருக்கு உத்தரவிட்டேன்.
இதையடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் பணியாற்றும் தற்காலிகப் பணியாளர்கள், அதாவது தற்காலிக அர்ச்சகர்கள், துப்புரவுப் பணியாளர்கள், அன்னதானக் கூடங்களில் பணியாற்றும் சமையலர்கள், இதர தினக்கூலிப் பணியாளர்கள் என்று 40 ஆயிரம் தற்காலிகப் பணியாளர்களின் விவரங்களை தயார் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, அறநிலையத் துறை ஆணையர் உத்தரவிட்டார்.
ஆனால், கரோனா தொற்று மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக இத்தகவல் தயாரிக்கும் பணி நிறைவடையவில்லை. இதனால், தற்காலிகப் பணியாளர்களின் கோரிக்கைகள் மீது முடிவெடுக்க முடியவில்லை.
இந்நிலையில், தற்போது கோயில்களில் பணியாற்றும் 40 ஆயிரம் தொகுப்பூதியப் பணியாளர்களை விடுவிக்குமாறு அறநிலையத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதனால் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் 40 ஆயிரத்துக்கும் அதிகமான தற்காலிகப் பணியாளர்கள் வேலையிழக்கும் சூழல் உருவாகியுள்ளது. அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியதாகியுள்ளது.
எனவே, இந்த தேவையற்ற முடிவைக் கைவிட்டு, ஏற்கெனவே நான் சட்டப்பேரவையில் அறிவித்தவாறு, குறைந்த சம்பளத்தில் நீண்டகாலமாக தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் கோயில் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT