

ஆன்லைனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விநாடி- வினா போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஜப்பான் டோக்கியோ நகரில் ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8 வரை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டியில், மேசைப்பந்து போட்டியில் சத்யன் மற்றும் சரத் கமல், வாள் சண்டையில் பவானி தேவி, பாய்மரப் படகோட்டுதலில் கணபதி, வருண், தக்கர் மற்றும் நேத்ரா குமணன் ஆகியோர் தமிழகத்தில் இருந்து பங்கேற்கவுள்ளனர்.
அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சேலம் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஜூலை 22-ம் தேதி வரை ஒலிம்பிக் செல்ஃபி பாயின்ட் ஏற்படுத்தி வீரர், வீராங்கனைகள் மற்றும் பொதுமக்களுக்கு ஒலிம்பிக் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘ரோடு டூ டோக்கியா- 2020’ என்ற தலைப்பில் ஆன்லைனில் ஒலிம்பிக் விநாடி-வினா போட்டி நடக்கிறது. இதில். அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். போட்டிக்கு https://fitindia.gov.in என்ற இணையதள முகவரியில், ‘ரோடு டூ டோக்கியோ - 2020’ என்ற இணைப்பில் கலந்து கொள்ளலாம். ஒலிம்பிக் தொடர்பான 10 கேள்விகள் கேட்கப்படும். ஒருவர் ஒருமுறை மட்டுமே பங்கேற்க முடியும். வெற்றி பெற்றவர்களுக்கு இந்திய அணியின் டி-ஷர்ட் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.