கொளக்காநத்தம் ஊராட்சிக்கு ரூ.73 லட்சத்தில் புதிய மின்வழி பாதை அமைக்கும் பணி தொடக்கம்  :

கொளக்காநத்தம் ஊராட்சிக்கு ரூ.73 லட்சத்தில் புதிய மின்வழி பாதை அமைக்கும் பணி தொடக்கம் :

Published on

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் புதுக்குறிச்சி துணை மின் நிலையத்திலிருந்து கொளக்காநத்தம் ஊராட்சிக்கு ரூ.73 லட்சம் மதிப்பில் 22 கிலோவாட் கொண்ட புதிய மின்வழி பாதை அமைக்கும் பணியை மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கொளக்காநத்தத்தில் நேற்று தொடங்கி வைத்தார்.

இத்திட்டம் குறித்து அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தது: புதுக்குறிச்சி துணை மின் நிலையத்திலிருந்து 18 கி.மீ. சுற்றளவில் காரை, வரகுபாடி, சா.குடிகாடு, தெற்குமாதவி, சிறுகடம்பூர் வழியாக கொளக்காநத்தத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த வழித்தடத்தில் அதிக மின் இழப்பு, அடிக்கடி தாழ்வழுத்த மின்சாரம் மற்றும் மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.

இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையின்படி, புதுக்குறிச்சி துணை மின் நிலையத்திலிருந்து காரை வழியாக 5.7 கி.மீ. தொலைவுக்கு 22 கிலோ வாட் திறன் கொண்ட புதிய மின் பாதை ரூ.73 லட்சம் மதிப்பீட்டில் கொளக்காநத்தம், அயினாபுரம், அணைப்பாடி ஆகிய கிராமங்களுக்கு அமைக்கப்படுகிறது. இதன்மூலம் மின் தடை மற்றும் மின் இழப்பு, தாழ்வழுத்த மின் விநியோகம் தடுக்கப்பட்டு, சீரான முறையில் மின்சாரம் வழங்கப்படும் என்றார். நிகழ்ச்சியில், ஆலத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர் என்.கிருஷ்ணமூர்த்தி, செயற்பொறியாளர் ராஜேந்திர விஜயன், உதவி செயற்பொறியாளர்கள் முத்தமிழ்ச்செல்வன், ரவிக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in