

திருநெல்வேலி மாநகர காவல்துறை (சட்டம் ஒழுங்கு) துணை ஆணையராக சுரேஷ்குமார் நேற்று பொறுப்பேற்றார்.
திருநெல்வேலி மாநகர காவல்துறை (சட்டம் ஒழுங்கு) துணை ஆணையராக கடந்த 22 நாட்களாக பணியாற்றிய ராஜராஜன் தூத்துக்குடி பேரூரணி போலீஸ் பயிற்சி பள்ளி முதல்வராக மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து புதிய துணை ஆணையராக சென்னை சிறப்பு போலீஸ் பயிற்சி பள்ளி கமாண்டராக பணியாற்றிய சுரேஷ்குமார் நேற்று பொறுப்பேற்றார். செய்தியாளர்களிடம் அவர்கூறும்போது “திருநெல்வேலி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ரவுடிகளின் நடவடிக்கைகள் முற்றிலும் ஒழிக்கப்படும். திருநெல்வேலி எனக்கு புதிய இடமல்ல. ஏற்கெனவே இதே இடத்தில் துணை ஆணையராக பணியாற்றியிருக்கிறேன். ஜாமீனில் வெளியே வந்துள்ள பழைய குற்றவாளிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுவர். கரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் முகக்கவசம் அணிவது,சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.