கீழணைக்கு காவிரி தண்ணீர் வந்தது: மலர் தூவி வரவேற்பு : கடலூர் மாவட்ட டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி

கல்லணையில் இருந்து காவிரி தண்ணீர் கீழணைக்கு வந்து சேர்ந்துள்ளதை பொதுப்பணித் துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
கல்லணையில் இருந்து காவிரி தண்ணீர் கீழணைக்கு வந்து சேர்ந்துள்ளதை பொதுப்பணித் துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
Updated on
1 min read

கீழணைக்கு மேட்டூர் தண்ணீர் வந்ததையடுத்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர்.

டெல்டா பகுதி சாகுபடிக்கு கடந்த 12-ம் தேதி மேட்டூர் அணையில் காவிரி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 16-ம் தேதி கல்லணை திறக்கப்பட்டது. இதில் இருந்து வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆறு ஆகியவைகளுக்கு காவிரி தண்ணீர் சென்றது. கொள்ளிடம் ஆற்றில் ஆரம்பத்தில் விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் விநாடிக்கு 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் இரவு12 மணிக்கு கீழணைக்கு காவிரி தண்ணீர் வந்தடைந்தது. இதை தொடர்ந்து சிதம்பரம் பொதுப்பணித் துறைக்கு உட்பட்ட கீழணை பொதுப்பணித் துறை உதவி செயற் பொறியாளர் அருணகிரி தலைமையில் அலுவலர்கள் பூஜை போட்டனர். பின்னர் கொள்ளிடம் ஆற்றில் மலர்கள் தூவி வரவேற்றனர். 9 அடி கொள்ளளவு உள்ள கீழணையில் தற்போது 1 அடிதண்ணீர் மட்டும் உள்ளது. இதனால் கடலூர், மயிலாடுதுறை மாவட்ட டெல்டாபகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதற்கிடையே கல்லணையில் விநாடிக்கு 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டாலும், அது கீழணைக்கு விநாடிக்கு 300 கனஅடியாக வந்து சேருகிறது. வரும் வழியில் வெப்பம் காரணமாக மணல் தண்ணீரை உறிஞ்சிடுவதால் கீழணைக்கு வரும் தண்ணீர் குறைந்து விடுவது குறிப்பிடத்தக்கதாகும்.

கீழணையில் 7 அடி ஆனதும் விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதற்கு முன்பு வீராணம் ஏரியை நிரப்பிட பொதுப்பணித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in