ஈரோடு மாவட்டத்தில் 28 இடங்களில் - நோய் எதிர்ப்புத் திறன் கண்டறிய மக்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிப்பு :

ஈரோடு மாவட்டத்தில் 28 இடங்களில் -  நோய் எதிர்ப்புத் திறன் கண்டறிய மக்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிப்பு :
Updated on
1 min read

ஈரோடு மாவட்டத்தில் 28 இடங்களில் நோய் எதிர்ப்புத் திறன் குறித்து பொதுமக்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தாக்கம் குறைந்து வருகிறது. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் கரோனா 2-வது அலை குறையத் தொடங்கி உள்ளது. மாவட்டத்தில் 28 இடங்களில் பொதுமக்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்க சுகாதாரத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு இடத்திலும் 30 வீடுகளில் உள்ளவரிடம் இந்த பரிசோதனை நடத்தப்படுகிறது. இதில் கரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்கள், பாதிப்பில் இருப்பவர்கள், காய்ச்சல் வந்ததே தெரியாமல் சரியானவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படும். இதற்காக ஒவ்வொரு பகுதிக்கும் டாக்டர், லேப் டெக்னீசியன்கள், சுகாதார ஆய்வாளர், கிராம சுகாதார செவிலியர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களிடம் சேகரிக்கப் படும் ரத்த மாதிரிகள் கோவைக்கு அனுப்பி வைக்கப்படும். வழக்கமாக தொற்று முடிந்தவுடன் பொதுமக்களிடம் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரித்து இருக்கிறதா என்பதை கண்டறிய இந்த சோதனை நடத்தப்படும்.

தற்போது நடத்தப்படும் இந்த சோதனை டெல்டா பிளஸ் கரோனா தொற்று கண்டுபிடிப்பதற்காக நடத்தப்படுகிறது. எனினும், இந்த சோதனைக்கான காரணம் பின்னர் தான் தெரியும்.

இவ்வாறு கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in