

ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 12,250 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் சுழற்சி முறையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதன்படி ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் நாள்தோறும் 20 வார்டுகள் வீதம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மக்கள் இரவு முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுச் சென்றனர்.
இதுபோல் பெருந்துறை, பவானி, அந்தியூர், சத்தியமங்கலம், மொடக்குறிச்சி, கோபி உட்பட மாவட்டம் முழுவதும் நேற்று 107 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டது. நேற்று கோவிஷீல்டு தடுப்பூசி மட்டும் போடப்பட்டது.
மாநகர் பகுதியில் உள்ள 20 மையத்திலும் தலா 130 டோக்கன் அடிப்படையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதன்படி மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 12 ஆயிரத்து 250 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 81 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.