சேலத்தில் அவ்வப்போது  மழை பெய்து வருவதால் குண்டும், குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். சேலம் 4 ரோடு-சத்திரம் சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் சிரமத்துடன் வாகனத்தை  இயக்கி வரும் நபர்.  			      படம்: எஸ்.குரு பிரசாத்
சேலத்தில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் குண்டும், குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். சேலம் 4 ரோடு-சத்திரம் சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் சிரமத்துடன் வாகனத்தை இயக்கி வரும் நபர். படம்: எஸ்.குரு பிரசாத்

பாதாள சாக்கடை பணியில் தொய்வு சாலையில் மழை நீர் தேங்குவதால் அவதி : சேலம் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

Published on

சேலம் மாநகராட்சிப் பகுதியில் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் சாலையில் மழை நீர் தேங்கி மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை மண்டலங்களில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இங்கு பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை பணி முடிவுற்று, இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் சாக்கடை அமைக்க சாலைகளை தோண்டி குழாய் பதிக்கும் பணி நடந்து முடிந்துள்ளது. ஆனால், தார் சாலை அமைக்காததால் குண்டும், குழியுமாக மாறியுள்ளது. சாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமான நிலையில் உள்ளது.

மேலும், தென்மேற்கு பருவ மழை ஆரம்பித்து விட்ட நிலையில், சேலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குண்டும், குழியுமான சாலைகளில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.

சேலம் நான்கு ரோட்டில் இருந்து அரிசிபாளையம் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சாலை தோண்டப்பட்டு, குழாய் பதிக்கும் பணி நடந்தது. அதன்பின்னர், பணியில் தொய்வு ஏற்பட்டதால், தார் சாலை அமைக்கும் பணி கைவிடப்பட்டுள்ளது. இதனால், நான்கு மாதங்களாக இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் போக்குவரத்து வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல, சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள நெ.2 புதுத்தெரு பகுதியில் பாதாள சாக்கடைக்காக ஆறு மாதங்களுக்கு முன்பு குழி தோண்டப்பட்டு, பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. மிலிட்டரி சாலையையும், அம்மாப்பேட்டை பிரதான சாலையையும் இணைக்கும் முக்கிய சாலை என்பதால் எப்போதும் போக்குவரத்து இருக்கும். ஆனால், சாலைப் பணியில் ஏற்பட்டுள்ள மெத்தனப் போக்கால், கடந்த ஆறு மாதமாக போக்குவரத்து இன்றி பொதுமக்கள் பலரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

எனவே, மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட சாலை பணிகளை விரைந்து முடித்து தார் சாலை அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in