

வேலூரில் தந்தை உயிரிழந்ததால் காய்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த சிறுவனுக்கு ‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலியாக அதிமுக மாநகர மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.
வேலூர் மாவட்டம் பலவன் சாத்து குப்பம் ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர் மாற்றுத் திறனாளி ஜெயசீலன் (57). இவரது மனைவி இந்திரா (50). இவர்களுக்கு, ஜனனி (15) என்ற மகளும், யஷ்வந்த் (13) என்ற மகனும் உள்ளனர். வேலூர் டோல்கேட் பகுதியில் உள்ள உழவர் சந்தை முன்பாக ஜெயசீலன் காய்கறி வியாபாரம் செய்துவந்தார்.
இதில், கிடைத்த சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்தார். ஜெயசீலனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மே மாதம் 11-ம் தேதி அனுமதிக்கப்பட்டர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயசீலன் உயிரிழந்தார். அவருக்கு கரோனா தொற்று இல்லாத நிலையில் கரோனா விதிமுறைகளுடன் அடக்கம் செய்ய பண வசதி இல்லாததால் தன்னார்வலர்கள் உதவியுடன் அடக்கம் செய்யப் பட்டது. இதற்கிடையில், குடும் பத்தை காப்பாற்ற தாயாருடன் இணைந்து சிறுவன் யஷ்வந்த் காய்கறி வியாபாரத்தில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்தார். இதுகுறித்த செய்தி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் நேற்றுமுன்தினம் வெளியானது.
இந்நிலையில், வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, சிறுவன் யஷ்வந்துக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவியை நேற்று வழங்கினார். அப்போது, மாநகர் மாவட்டப் பொருளாளர் மூர்த்தி மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.